684 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்

குடியாத்தத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 684 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
684 மது பாட்டில்கள் பறிமுதல்
சென்னை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு தலைமை அலுவலக உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலையில் குடியாத்தம்- மேல்ஆலத்தூர் ரோடு நத்தம் வைரம்நகர் அருகே குடோன் போல் இருந்த கட்டிடத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு 180 மில்லி கொண்ட 684 மது பாட்டில்கள், பணம் ரூ.27 ஆயிரத்து 810, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் பணம் ஆகியவற்றை குடியாத்தம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.
2 பேர் கைது
இதனை தொடர்ந்து குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில் கைது செய்யப்பட்டவர்கள் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை ஆழ்வார் முருகப்ப முதலியார் தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 53), நெல்லூர்பேட்டை 2-வது சிவகாமி அம்மன் தெருவை சேர்ந்த சுதாகர் (43) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.