ரூ.69¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.69¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ரூ.69¼ லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை, சென்னையை சேர்ந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.69¼ லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை, சென்னையை சேர்ந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடுகளுக்கு விமானங்கள்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், அந்த நாடுகளில் இருந்து திருச்சிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த விமானங்களில், வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சோதனை

இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, 2 பயணிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதில் சிவகங்கையை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 36) என்ற பயணி மின்னணு விளையாட்டு பொருட்கள் எடுத்து வந்தார். அந்த விளையாட்டு பொருளை சோதனை செய்த போது, ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்க தகடுகள், ஒரு தங்கச்சங்கிலியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்தனர்.

ரூ.69¼ லட்சம் தங்கம் பறிமுதல்

இதேபோல் சென்னையை சேர்ந்த சபீர்கான் (38) என்ற பயணி கொண்டு வந்த மின்னணு விளையாட்டு சாதனத்தை சோதனை நடத்தியதில் ரூ.34 லட்சத்து 26 ஆயிரத்து 380 மதிப்புள்ள தங்க தகடுகள், தங்கச்சங்கிலி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்து ஸ்ரீதர், சபீர்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நேற்று ஒரே நாளில் 2 பயணிகளிடம் சுமார் ரூ.69¼ லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story