அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 7 பேர் கைது
தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதை தடுக்கவும், சுப்ரீம் கோர்ட்டால் தடைவிதிக்கப்பட்ட சரவெடிகள் தயாரிப்பதை கண்காணிக்கவும், கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் சிலர் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுகள் தயாரிப்பதாகவும், அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதற்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகிேயாரின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், ராமமூர்த்தி, ஆகியோர் விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, கோட்டையூர், கலைஞர் காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு தயாரித்த விஜயகரிசல்குளத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 38), செந்தூரப் பாண்டியன் (60), கந்தசாமி (46), விக்னேஸ்வரன் (33), மற்றும் இளஞ்செழியன் (40) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியில் துரைவைரம் (41), பழனியப்பன் (47) ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து தலா 20 கிலோ சரவெடிகள் மற்றும் பேன்சி ரக வெடிகளை பறிமுதல் செய்தனர்.