ரூ.7 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள்


ரூ.7 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள்
x

நெமிலி பேரூராட்சியில் ரூ.7 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

குடிநீர் மேம்பாட்டு பணி

நெமிலி பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 குடிநீர் மேம்பாட்டு பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு குடிநீர் மேம்பாட்டு பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

13,494 பேர் பயனடைவார்கள்

நெமிலி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2,195 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. மேலும் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

இப்பணிகள் ஓராண்டு காலத்திற்குள் முடிக்கப்பட்டு இப்பேரூராட்சியை சேர்ந்த 13,494 பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள் (நெமிலி), தெய்வசிகாமணி (காவேரிப்பாக்கம்), நெமிலி நகர செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story