ரூ.7½ கோடியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள்


ரூ.7½ கோடியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள்
x

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் ரூ.7.66 கோடியில் நடைபெற உள்ள பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்

வளர்ச்சித்திட்ட பணிகள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.19லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கினார். பின்னர் அத்தியூர் பகுதியில் ஆதிதிராவிடர் மகளிர் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினை தொடங்கி வைத்து பால் பரிசோதனை கருவிகள் ரூ.40,000 மதிப்பீட்டிலும், பால் கேன்கள் ரூ.30,000 மதிப்பீட்டிலும், ஓராண்டுக்கான பணியாளர்கள் ஊதியம் ரூ.28,800 மற்றும் இதர பணிகளுக்கான ஊதியம் ரூ.1,200 என மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் முழு மானியத்தொகை வழங்குவதற்கான ஆணையினை அமைச்சர் வழங்கினார். துங்கபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் 2 சிமெண்டு சாலை அமைக்கும் பணியினையும், கீழப்புலியூர் சிலோன் காலனியில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்த அமைச்சர் கீழப்புலியூர் பஸ் நிறுத்தத்தில் பெரம்பலூர் முதல் எழுமூர் வரை கூடுதல் பஸ் சேவையினையும் தொடங்கி வைத்தார்.

ரூ.7.66 கோடியில்...

அதனைத்தொடர்ந்து, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணியினையும், ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் ஜமாலியா நகர் பூங்கா அமைக்கும் பணியினையும், ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டு பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் பேரூராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும், துப்புரவு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அரும்பாவூர் பேரூராட்சிக்கு 4 மின்கல வாகனமும், குரும்பலூர் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு தலா 1 வாகனமும், பூலாம்பாடி பேரூராட்சிக்கு 2 வாகனமும் என மொத்தம் 8 வாகனங்கள் ரூ.12.32 லட்சம் மதிப்பீட்டில் வழங்கி பேசினார். மொத்தம் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாஹிர் உசேன், செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், தி.மு.க. பிரதிநிதிகள் துங்கபுரம் தண்டபாணி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story