திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை வத்தலக்குண்டு குரும்பபட்டியை சேர்ந்த ஸ்ரீதர் பாண்டி (வயது 35) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். திண்டுக்கல்- திருச்சி 4 வழிச்சாலை மா.மூ.கோவிலூர் பிரிவு அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே மோட்டார்சைக்கிள் ஒன்று வந்தது.
அதன்மீது ேமாதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையில் பஸ் உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது பஸ்சி்ல் இருந்த பயணிகள் அபயகுரல் எழுப்பினர். இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி அப்பளம்போல் நொறுங்கியது.
7 பேர் படுகாயம்
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போலீசாரும், பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் ஸ்ரீதர்பாண்டி, கண்டக்டர் நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த சிங்கராஜ் (43) மற்றும் பயணிகளான கொசவபட்டியை சேர்ந்த ஜெசிகா (31), உசிலம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி (35), மதுமிதா (17), பாரதிபுரம் பவித்ரா (23), சசிகலா (38) ஆகிய 7 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலையில் பஸ் உருண்டபோது எதிரே வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.