ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு-அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
கடன் வழங்கும் நிகழ்ச்சி
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சரும், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளருமான மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக நிதி, மனிதவள மேம்பாடு மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்துகொண்டு 643 பேருக்கு ரூ.5 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு, ஆதிதிராவிடர் நலத்திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கான கடன் உள்பட 12 வகையான கடனுக்கான காசோலைகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
மகளிருக்கான சிறப்பு திட்டங்கள்
தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் அமைகிறதோ, அப்போதெல்லாம் மகளிருக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தர்மபுரி மாவட்டத்தில் முதன்முதலாக மகளிருக்கு சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டது. அவரது ஆட்சி காலத்தில் தான் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அவரது வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போதைய தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மகளிருக்கு இலவச பஸ் சேவை, மகளிர் உரிமைத்தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி செயல்பாட்டுக்கு வர உள்ளது. மகளிர் வங்கிக்கணக்கில் செலுத்தக்கூடிய வடிவமைப்பில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நகர்ப்பகுதியில் 2-வது கட்டமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
ரூ.7 லட்சம் கோடி கடன்
தமிழகத்தில் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவும், தொழில் தொடங்க உந்து சக்தியாக இருக்கும் வகையிலும் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுகுறு தொழில் கடன், மாணவர்களுக்கான கல்விக்கடன், சுயஉதவி குழுக்களுக்கான கடன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் உமா மகேசுவரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி, மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட கவுன்சிலர்கள், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மாநகர பகுதி செயலாளர்கள், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, ஒன்றிய செயலாளர்கள் மானூர் அன்பழகன், நாங்குநேரி மேற்கு ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, ராதாபுரம் மேற்கு ஜோசப் பெல்சி, இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விண்ணப்பப்பதிவு மையங்களில் ஆய்வு
முன்னதாக பாளையஞ்செட்டிகுளம், ரெட்டியார்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு மையங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பகுதிகளில் மரக்கன்றுகளையும் நட்டார்.