குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த 16 லாரிகளுக்கு 7¾ லட்சம் அபராதம்


குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த                        16 லாரிகளுக்கு 7¾ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 28 Feb 2023 6:45 PM GMT (Updated: 28 Feb 2023 6:45 PM GMT)

குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த 16 லாரிகளுக்கு ரூ.7¾ லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த 16 லாரிகளுக்கு ரூ.7¾ லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

வாகன சோதனை

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராத நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி செல்வதை சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல் நாகர்கோவில் நேசமணி நகர் போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அபராதம் விதிப்பு

சப் -இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தியபோது அனுமதியின்றியும் அதிக பாரத்துடன் மணல் ஏற்றி வந்த 11 லாரிகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட டிரைவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அந்த லாரிகளை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அபராதம் விதித்தனர். 11 லாரிகளுக்கும் ரூ.6¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தக்கலை

இதே போல் தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் தக்கலை பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக கேரளாவுக்கு கனிம பொருட்களை ஏற்றி சென்ற லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 5 லாரிகளில் அளவுக்கு அதிகமான எடையில் பாறைப்பொடி ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 5 லாரிகளுக்கும் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story