பட்டுக்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் 7 உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பட்டுக்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் 7 உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து 7 உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நகர்மன்ற கூட்டம்
பட்டுக்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று காலை நகர் மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது. தலைவர் சண்முகப்பிரியா தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், நகர்மன்ற துணைத்தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசிய விவரம் வருமாறு:-
ஜவகர்பாபு:- நாடியம்மன் கோவில் திருவிழா காலம் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் குளத்தை தூர்வாருகிறோம் என்ற பெயரில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடைக்கிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கு தண்ணீர் இல்லை. திருவிழா முடிந்த பின் தாமதமாக தூர்வாரி இருக்கலாம். ஆனால் அவசரப்பட்டு கோவில் குளத்தில் நீர் இல்லாமல் உள்ளது. நகரில் கடுமையான வறட்சி நிலவும் இந்த நேரத்தில் காலை, மாலை குடிநீர் வழங்க வேண்டும்.
3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டம்
பிரியாஇளங்கோ:- நகர்மன்ற கூட்டம் 30 நாட்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் 3 மாத காலமாகியும் நகர்மன்ற கூட்டம் நடத்தாததால் பல வேலைகள் நடைபெறவில்லை.
ஆணையர்:- 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
சதாசிவகுமார்:- நகர்மன்றம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் ஊதியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. நகர்மன்ற கூட்டத்தை வேறு இடத்தில் நடத்தியது சரி அல்ல.
ரகுராமன்:-நகராட்சி நிர்வாகம் மோசமான நிலைக்கு போய்விட்டது.
நளினி சம்பத்:- எனது வார்டில் மின்கம்பங்கள் இருந்தும் விளக்குகள் எரிவதில்லை. கழிப்பிடத்தின் கழிவுநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
உள்ளிருப்பு போராட்டம்
அப்போது திடீரென தி.மு.க. உறுப்பினர்கள் சாந்தி குணசேகரன், ராமலிங்கம், மகாலட்சுமி, பிரியாஇளங்கோ, குமார், கோமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சதாசிவகுமார் ஆகிய உறுப்பினர்கள் கடந்த ஓராண்டாக எந்த வளர்ச்சி திட்டத்தையும் நிறைவேற்றாததை கண்டித்து நகர்மன்ற தலைவருக்கு எதிரே தரையில் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.