4¼ கிலோ கஞ்சா விற்ற 7 பேர் கைது

கிணத்துக்கடவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் -இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் கடந்த 2 நாட்களாக கிணத்துக்கடவு, கோவில் பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களில் கஞ்சா ஒழிப்பு சோதனை நடத்தினர்.
இதில், கோவில்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்றதாக பெரம்பலூர், பாரதிதாசன் நகரை சேர்ந்த பிரதீப் (வயது28), கோவை சுந்தராபுரம் ஹசிங்யூனிட்டை சேர்ந்த சூர்யபிரகாஷ் (21), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா மேட்டுவலசை சேர்ந்த தரணிதரன் (25) ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது போல் தாமரைக்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்றதாக ஒட்டன்சத்திரம் அரசபிள்ளைபட்டியை சேர்ந்த நவீன் (22), சேலம் ஏ.டி.சி. நகரை சேர்ந்த ஹரிஹரன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
7 பேர் கைது
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப் அருகே நேற்று போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் கோவை சிங்காநல் லூர், என்.கே.பாளையம் ரோட்டை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ரஞ்சித் (27), அவருடன் வந்தவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவிலை சேர்ந்த தாமரை செல்வன் (23) என்பதும், அவர்கள் விற்பதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு பகுதியில் கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்த போலீசார் 4¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.






