மின்மாற்றிகளை உடைத்து தாமிர கம்பிகளை திருடிய ஊழியர் உள்பட 7 பேர் கைது
திருக்கோவிலூர் பகுதியில் மின்மாற்றிகளை உடைத்து தாமிர கம்பிகளை திருடிய மின்வாரிய ஊழியர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது
திருக்கோவிலூர்
மின்மாற்றிகள் உடைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த தாமிர கம்பிகளை திருடிச்சென்ற சம்பவம் தொடர்கதையாக நிகழ்ந்து வந்தது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து மின்மாற்றிகளை உடைத்து தாமிரகம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வந்தனர்.
வாகன சோதனை
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் உள்ள அய்யனார் கோவில் அருகே திருக்கோவிலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மின்மாற்றிகளில் பயன்படுத்தப்படும் தாமிர கம்பிகள் இருந்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் ஆட்டோவில் வந்தவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த ஷபிஅகமது மகன் சவுகத்அலி(வயது 29) என்பதும், இவர், வட தொரசலூர் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ்(20), குமார் மகன் அன்பு(19) ஆகியோருடன் சேர்ந்து திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளை உடைத்து, அதன் உள்ளே இருக்கும் தாமிர கம்பிகளை திருடி விற்றதும் தொியவந்தது. இதையடுத்து சவுகத் அலி உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 150 கிலோ தாமிர கம்பிகளுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருட்டு வழக்கு தொடர்பாக மின்வாரிய ஊழியர் சின்னசேலத்தை சேர்ந்த தாஜுதீன் மகன் இப்ராஹிம்(35) மற்றும் திருடிய தாமிர கம்பிகளை விலைக்கு வாங்கிய வியாபாரிகள் தியாகதுருகத்தை சேர்ந்த ஜான்பாஷா மகன் ஜாபர்(35), கள்ளக்குறிச்சி பிச்சைக்கனி மகன் முனிராஜ்(39), சேஷையா மகன் ஆனந்த்(40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.