பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததில் ஆசிரியர், மாணவிகள் உள்பட 7 பேர் காயம்
பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததில் ஆசிரியர், மாணவிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
ஆண்டிமடம்:
மரக்கிளை முறிந்து விழுந்தது
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 510 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 25 ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளியில் இறை வணக்கம் நிகழ்ச்சி நடந்து முடிந்ததையடுத்து, மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.
அப்போது பள்ளி முன்பு உள்ள இலுப்பை மரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்தது. இதில் சமூக அறிவியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், 6-ம் வகுப்பு மாணவ, மாணவிகளான விஷ்ணு பிரியா, சிந்துஜா, மேகவர்த்தினி, ராகுல், நித்திலன், ஆகாஷ் என 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.
கோரிக்கை
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், இந்த பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்து, தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் போதிய கட்டிட வசதி இல்லாததால் மாணவர்களுக்கு மரத்தடியில் அமர்ந்து தான் பாடம் கற்பிக்கும் சூழல் உள்ளது. மேலும் அந்தப் பள்ளிக்கு பாதை வசதி இல்லாமலும், போதிய கழிவறை வசதிகள் இல்லாமலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
மழைக்காலங்களில் பள்ளியின் இருபுறங்களிலும் மழை நீர் தேங்கி, மிகவும் மோசமான சூழல் ஏற்படும் நிலையில் பள்ளி அமைந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும். பாதை வசதி ஏற்படுத்தி, கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும். பள்ளியை சுற்றி நீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.