மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்ற பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 7 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்


மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்ற பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 7 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
x

அனுமதி பெறாமல் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்ற பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 7 பேரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

புதுக்கோட்டை

கல்வி சுற்றுலா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கரு.தெற்கு தெரு கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு நேற்று கல்வி சுற்றுலா சென்றனர். இதற்கு கல்வி துறையின் அனுமதியை பெறவில்லை என கூறப்படுகிறது.

நேற்று காலை அப்பகுதியில் சென்றவர்கள் பள்ளிக்கூடம் பூட்டப்பட்டிருப்பதை அறிந்து விசாரித்தனர். அப்போது மாணவர்களை ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா அழைத்து சென்றதும் அதற்கு உரிய அனுமதி பெறாததும் தெரியவந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகியது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இதையடுத்து கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களை ஆசிரியர்கள் அவசரமாக ஊருக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே அனுமதி இல்லாமல் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்றது குறித்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள, மற்றும் கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர் என மொத்தம் 7 பேரிடம் அறந்தாங்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் நேற்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டியை சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், கரு.தெற்கு தெரு அரசு நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளை அனுமதியின்றி கடல் பகுதிக்கு அழைத்து சென்றது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.


Next Story