தியாகதுருகம் அருகேபணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
தியாகதுருகம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் அருகே உள்ள புது உச்சிமேடு கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முனியப்பன் கோவில் அருகே உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் 5-க்கும் மேற்பட்டோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதை பார்த்து உஷாரான போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் பாலாஜி (வயது 27), நாராயணன் மகன் ரவி (35), சுப்பிரமணியன் மகன் சிலம்பரசன் (27), ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (34), கோவிந்தசாமி மகன் முருகன் (45), ராஜமாணிக்கம் மகன் பாலகிருஷ்ணன் (39), கூத்தக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (29) ஆகியோரை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 40 புள்ளித்தாள், ரூ.700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.