போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது
கோவையில் போதை மாத்திரை விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாத்திரைகள், கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் போதை மாத்திரை விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாத்திரைகள், கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வலி நிவாரணி
கோவை நகரில் போதைப்பொருள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர்.
இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்க கூடாது எனவும் போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.
போலீசார் சோதனை
இந்நிலையில், கோவை பெரிய கடைவீதி காந்திநகர், பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் போதை மாத்திரை விற்ப னையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்ட னர்.
அப்போது அங்கிருந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சோதனை நடத் திய போது அவர்கள் போதை மாத்திரை விற்கும் கும்பல் என்பது தெரியவந்தது.
4 பேர் சிக்கினர்
உடனே போலீசார் போதை மாத்திரை விற்பனை கும்பலை சேர்ந்த வேலாண்டிபாளையத்தை சேர்ந்த கணேஷ் பாபு (வயது24), பீளமேடு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சரவணன் (31), தடாகம் ரோடு இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ்குமார் (21), திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 85 போதை மாத்திரைகள், 4 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் 3 பேர் பிடிபட்டனர்
இதேபோல், கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சுஜித் (25), ஜெகநாதபுரத்தை சேர்ந்த சிவசூரியன் (23), புலியகுளம் மருதாச்சலம் தெருவை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.