கான்கிரீட் கலவையுடன் சென்ற லாரி கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் கான்கிரீட் கலவையுடன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
குருபரப்பள்ளி:
லாரி கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே ஏக்கல்நத்தம் மலைகிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பவர் மலை மீது வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டிற்கு கான்கிரீட் போடுவதற்காக கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளி பகுதியில் இருந்து லாரியில் கான்கிரீட் கலவை கலக்கும் எந்திரத்துடன் அதேபகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பூங்கொடி (வயது 23), இந்திராணி (45), ஜோதி (30), லோகநாதன் (23), கோபி (40), ஐ.பி.கானப்பள்ளி சென்னப்பன் (29) ஆகியோர் சென்றனர்.
இந்த லாரியை பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த அஜித்குமார் (23) ஓட்டி சென்றார். நேற்று காலை ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் எந்திரத்துடன் சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று பின்னோக்கி சென்று சாலையோரம் உள்ள 30 அடி அழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
7 பேர் காயம்
இந்த விபத்தில் டிரைவர் உள்பட 7 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.