தீவிரவாதிகள் போல் கடல் வழியாக ஊடுருவ முயன்ற 7 பேர் கைது


தீவிரவாதிகள் போல் கடல் வழியாக ஊடுருவ முயன்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 'சாகர் கவாச்' என்ற பெயரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். அதன்படி கடலூர் துறைமுகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் போல் வந்த 7 பேர் பிடிபட்டனர்

கடலூர்

கடலூர்

சாகர் கவாச்

கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுறுவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது.

இந்த ஒத்திகை ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச் போன்ற பெயர்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

7 தீவிரவாதிகள்

அதன்படி இந்த ஆண்டு ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் கடலோர பகுதிகளில் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கடலூர் துறைமுகம் கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடலில் விசை படகில் மத்திய, மாநில அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தீவிரவாதிகள் போல் வந்த 7 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள், கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வெடிகுண்டு வைப்பதற்காக வந்ததாக தெரிவித்தனர்.

வெடிகுண்டுகள் பறிமுதல்

இதையடுத்து போலீசார், அவர்களை துறைமுகம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆபரேஷன் சாகர் கவாச் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணியுடன் முடிவடைகிறது.


Next Story