முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேருக்கு ரூ.63 ஆயிரம் அபராதம்
மணவாடி பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேருக்கு ரூ.63 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
ரோந்து பணி
கரூர் மாவட்ட வன அலுவலர் சரவணன் அறிவுரைப்படி கரூர் வனச்சரக அலுவலர் தண்டபாணி, கரூர் பிரிவு வனவர் சாமியப்பன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் மணவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மணவாடி பகுதியில் பட்டா நிலங்களில் சிலர் வேட்டை நாய்களுடன் முயல் வேட்டையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர்.
அபராதம்
விசாரணையில் அவர்கள் கடவூர் அருகே உள்ள வலையபட்டியை சேர்ந்த தர்மர் (வயது 25), கருப்பையா (50), பழனியாண்டி (30), லெட்சுமணன் (29), தங்கவேல் (24), கதிர்வேல் (20) மற்றும் பாஞ்சாலிராஜன் (34) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தர்மர், கருப்பையா, பழனியாண்டி, லட்சுமணன் ஆகிய 4 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரமும், தங்கவேல், கதிர்வேல், பாஞ்சாலிராஜன் ஆகிய 3 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3 ஆயிரமும் மாவட்ட வன அலுவலரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.