கண்ணில் மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு


கண்ணில் மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு
x

திருமயம் அருகே மிளகாய் பொடியை கண்ணில் தூவி பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

மிளகாய் பொடியை தூவி...

அரிமளம் சாமந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி ரஞ்சிதா (வயது 26). இவர் நேற்று மாலை திருமயம் அருகே உள்ள காயாம்பட்டியில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டிற்கு மொபட்டில் விராச்சிலை- செங்கீரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆண்டிபட்டி மேல கண்மாய் பாலம் அருகே சென்றபோது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் ரஞ்சிதா கண்களில் மிளகாய் பொடியை தூவினர்.

இதில் நிலைக்குலைந்த ரஞ்சிதா தனது மொபட்டை சாலையோரம் நிறுத்தி கண் எரிச்சலால் அலறி துடித்தார்.

சங்கிலி பறிப்பு

இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி ரஞ்சிதா கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் சங்கிலி, ரூ.10 ஆயிரம், ஒரு செல்போன் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில் நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மிளகாய் பொடியை கண்ணில் தூவி பெண்ணிடம் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story