மர்ம ஆசாமிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு


மர்ம ஆசாமிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 28 Aug 2023 4:30 AM IST (Updated: 28 Aug 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 5 பெண்களிடம் நகை பறிப்பு நடைபெற்றதை தொடர்ந்து, மர்ம ஆசாமிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்


கோவை


கோவையில் 5 பெண்களிடம் நகை பறிப்பு நடைபெற்றதை தொடர்ந்து, மர்ம ஆசாமிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


5 பெண்களிடம் நகை பறிப்பு


கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 25-ந் தேதி கோவை தண்டுமாரியம்மன் கோவில் அருகிலும், டாடாபாத், பாப்பநாயக்கன்பாளையத்திலும் 3 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.


இந்த நிலையில் நேற்று முன்தினம் கணபதியை சேர்ந்த தமிழ்செல்வி (வயது 58) என்பவர் தனது மகளுடன் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தமிழ்செல்வி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.


இதேபோல் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்த சுசீலா (72) என்பவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


7 தனிப்படைகள்


கோவை மாநகர பகுதியில் நடைபெற்று வரும் தொடர் நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.


தனிப்படை போலீசார் நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் 4 பேர் தொடர்ந்து நகை பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வருவதும், முகத்தை ஹெல்மெட் மற்றும் முகக்கவசத்தால் மறைத்து, அந்தந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி நகையை பறித்துவிட்டு, மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் அனாதையாக நிறுத்திவிட்டு செல்வதும் தெரியவந்துள்ளது.


வாகன சோதனை தீவிரம்


எனவே நகை பறிப்பு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநகரம் முழுவதிலும் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் 3 போலீசார் நியமிக்கப்பட்டு இரவு, பகல் என்று தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


குறிப்பாக பஸ் நிலையம், மார்க்கெட் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநகருக்குள் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணிந்து இருப்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.



Next Story