இஸ்ரேலில் சிக்கி தவித்த 7 மாணவர்கள் கோவை திரும்பினர்
இஸ்ரேலில் சிக்கித்தவித்த 7 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் கோவை திரும்பினார்கள். அவர்களை கலெக்டர் கிராந்திகுமார் வரவேற்றார்.
கோவை
இஸ்ரேலில் சிக்கித்தவித்த 7 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் கோவை திரும்பினார்கள். அவர்களை கலெக்டர் கிராந்திகுமார் வரவேற்றார்.
போர் தீவிரம்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் இஸ்ரேலில் தங்கி உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அவர்களுக்கு உதவ 24 மணி நேர அவசர எண்களையும் இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலில் இருந்து சிக்கித்தவிப்பவர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக ஆபரேசன் அஜய் என்ற சிறப்பு திட்டம் மூலம் இஸ்ரேல் நாட்டில் இருந்து 212 பேர் நேற்று சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்பினார்கள்.
7 பேர் கோவை திரும்பினர்
இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தடைந்த அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். இதில் இஸ்ரேலில் உள்ள பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. மற்றும் முதுகலை படிப்புகளை படித்து வந்த கோவையை சேர்ந்த விமல், ராஜலட்சுமி, நாமக்கல்லை சேர்ந்த சந்தியா, விக்னேஷ், சந்தோஷ், நீலகிரியை சேர்ந்த திவாகர், கரூரை சேர்ந்த சந்தியா ஆகிய 7 பேர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு கோவை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை கலெக்டர் கிராந்திகுமார், விமான நிலைய அதிகாரி செந்தில் வளவன் உள்ளிட்ட அதிகாரிகள் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த 7 பேரையும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வரவேற்றதுடன் கட்டித்தழுவினார்கள். அப்போது அவர்களின் பெற்றோர் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது.
பின்னர் கோவையை சேர்ந்த ராஜலட்சுமி, விமல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதுகாப்பு அறை
நாங்கள் இஸ்ரேல் நாட்டில் உள்ள பெர்சேபா என்ற இடத்தில் தங்கி வந்தோம். மேற்படிப்புக்காக அங்கு சென்று இருந்தோம். பொதுவாக அந்த நாட்டில் அடிக்கடி போர் ஏற்படுவதால் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க ஆங்காங்கே வலிமையான இரும்பினால் ஆன பாதுகாப்பு அறை அமைத்து உள்ளனர்.
ஏதாவது தாக்குதல் நடப்பதற்கு முன்பு அறிவித்து விடுவார்கள். உடனே நாங்கள் அருகில் உள்ள பாதுகாப்பு அறைக்குள் சென்று விடுவோம். இதற்காக சிறப்பு செயலியும் செயல்படுத்தி உள்ளனர். எப்போது தாக்குதல் இருக்கும், எந்த நேரத்தில் அந்த பாதுகாப்பு அறைக்குள் செல்ல வேண்டும், எப்போது அதை விட்டு வெளியே வர வேண்டும் என்று முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள்.
பாதுகாப்பாக இருந்தோம்
இது அந்த நாட்டில் வசித்து வருபவர்களுக்கு புதியது இல்லை. அவர்கள் நன்றாக பழகி விட்டனர். ஆனால் வெளிநாட்டில் இருந்து அங்கு படிக்க வருபவர்களுக்கு அது புதிதாக இருக்கிறது. பாதுகாப்பு அறைக்குள் நாங்கள் இருக்கும்போது குண்டு மழை பொழியும் சத்தம் நன்றாக கேட்கும். ஆனால் அந்த அறைக்குள் இருக்கும் எங்களுக்கு முழு பாதுகாப்பு இருக்கிறது என்பதால் நாங்கள் பயம் இல்லாமல் இருந்தோம்.
ஒவ்வொரு இடத்துக்கு தகுந்தமாதிரி அறிவிப்பு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கல்வி நிலையத்துக்கு செல்லலாமா?, விளையாட்டு மைதானத்துக்கு செல்லலாமா? எப்போது எங்கு செல்ல வேண்டும் என்று அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும். அதை பார்த்து நாம் செல்ல வேண்டும். இது அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு பயம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் புதிதாக சென்ற எங்களுக்கு அது பயத்தை ஏற்படுத்தியது.
உணவுக்கு தட்டுப்பாடு இல்லை
இதுவரை நாங்கள் தங்கி இருந்த பகுதியில் உணவு, தண்ணீருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. தடையில்லாமல் மின்சாரம் உள்ளது. ஆனால் எந்த நேரத்திலும் அதற்கு தடை ஏற்படலாம் என்று பலர் சொன்னார்கள். ஏவுகணை தாக்குதல் நடக்கும்போது கண்டிப்பாக தண்ணீர் மற்றும் மின்சாரத்துக்கு தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இதனால்தான் எங்களை பலர் சொந்த ஊருக்கு சென்றுவிடுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் படித்துவரும் இடத்தில் உள்ள பேராசிரியர்களும் சொன்னார்கள். அதனால்தான் நாங்கள் பாதுகாப்பு கருதி தாய்நாட்டுக்கு வர தூதரகத்தை அணுகினோம்.
மீண்டும் படிக்க செல்வோம்
இஸ்ரேலில் போர் முடிந்த பின்னர் நாங்கள் அங்கு சென்று படிக்க தயாராக உள்ளோம். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து எங்களுக்கு கண்டிப்பாக தகவல் கொடுப்போம் என்று கூறினார்கள். எனவே நாங்கள் அங்கு அமைதி திரும்பியதும் இஸ்ரேலுக்கு சென்று மீண்டும் எங்கள் படிப்பை தொடர உள்ளோம்.
எங்களில் சிலர் தொடர்ந்து தமிழக அரசிடம் தொடர்பில் இருந்தனர். இதனால்தான் நாங்கள் விரைவில் சொந்த ஊர் திரும்ப முடிந்தது. எங்களை மீட்டு தாய் நாட்டுக்கு அழைத்து வந்த தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் அவர்கள் 7 பேரையும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்கள் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு அழைத்துச்சென்றனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாணவர்கள் 7 பேரும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றனர்.