பிளஸ்-2 பொதுத்தேர்வை 7 ஆயிரத்து 530 மாணவ, மாணவிகள் எழுதினர்


தினத்தந்தி 13 March 2023 6:45 PM GMT (Updated: 13 March 2023 6:45 PM GMT)

நாகை மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 7 ஆயிரத்து 530 மாணவ, மாணவிகள் எழுதினர். ஆசிரியர்கள், மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து தேர்வு எழுத வழி அனுப்பி வைத்தனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 7 ஆயிரத்து 530 மாணவ, மாணவிகள் எழுதினர். ஆசிரியர்கள், மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து தேர்வு எழுத வழி அனுப்பி வைத்தனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் நேற்று முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாகை மாவட்டத்தில் 34 மையங்களில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நடந்தது.காலை முதலே மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதுவதற்காக பள்ளிகளுக்கு வந்தனர்.

தொடர்ந்து நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு அறை குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீசில் தங்களது பதிவு எண்களை சரி பார்த்துவிட்டு உள்ளே சென்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

ஆரத்தி எடுத்த ஆசிரியர்கள்

நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு வந்த மாணவிகள் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி படத்தின் முன்பு நின்று, தேர்வை நல்ல முறையில் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.தொடர்ந்து அங்கிருந்த பள்ளி ஆசிரியர்கள், தைரியத்துடன் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவிகளை உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு ஆரத்தி எடுத்து தேர்வு மையத்துக்கு வழி அனுப்பி வைத்தனர்.

7530 மாணவ- மாணவிகள் எழுதினர்

இந்த பொது தேர்வுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படையினரும், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து தேர்வு மைய நுழைவு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத 3 ஆயிரத்து 891 மாணவர்களும், 4 ஆயிரத்து 317 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 208 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 3 ஆயிரத்து 468 மாணவர்களும், 4 ஆயிரத்து 62 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 530 பேர் தேர்வு எழுதினர்.

கலெக்டர் ஆய்வு

423 மாணவர்களும், 255 மாணவிகளும் என மொத்தம் 678 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வில் 81 மாற்றுத்திறனாளிகளுக்கு சொல்வதைக் கேட்டு எழுதும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்த பிளஸ்-2 தேர்வு மையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக பயமின்றி, தைரியத்துடன் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.


Next Story