ஏ.டி.எம். மில் கேட்பாரற்று கிடந்த ரூ.7 ஆயிரம்
மடத்துக்குளம் நால்ரோடு பகுதிக்கு அருகில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 4 மணியளவில் மடத்துக்குளம் குத்தூஸ் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மகன் ஆனந்தமுருகன் பணம் எடுப்பதற்காக சென்றார்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7 ஆயிரம் எடுக்கப்படாமல் அப்படியே இருந்தது. யாரோ ஏ.டி.எம். மில் எடுத்த பணத்தை மறதியாக அப்படியே விட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.உடனடியாக மடத்துக்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற ஆனந்தமுருகன் ரூ.7 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாத ஆனந்தமுருகனை போலீசார் பாராட்டினர். பணத்தை தொலைத்தவர்கள் உரிய ஆவணங்களுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபோல வெவ்வேறு ஏ.டி.எம்.களில் விட்டுச் செல்லப்பட்ட ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் உரிமை கோரப்படாமல் போலீஸ் நிலையத்தில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்வுகளில் வங்கி அதிகாரிகள் மனது வைத்தால் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் உடனடியாக பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.