மணல் குவாரி அமைக்க 7 கிராம பொதுமக்கள் எதிர்ப்பு


மணல் குவாரி அமைக்க 7 கிராம பொதுமக்கள் எதிர்ப்பு
x

குடியாத்தம் தாலுகா கூத்தம்பாக்கம், அனங்காநல்லூர் கிராமங்களில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் மனு அளித்தனர்.

வேலூர்

பொதுமக்கள் மனு

குடியாத்தம் தாலுகா கூத்தம்பாக்கம், அனங்காநல்லூர் கிராமங்களில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. மணல் குவாரி அமைக்க ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என சுற்றுச்சூழல் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கூத்தம்பாக்கம், அனங்காநல்லூர், வடக்காத்திபட்டி, சீத்தாபுரம், பாலாஞ்ஜிபட்டி, மோட்டூர், நாட்டாம்பட்டி ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காட்பாடியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றை நம்பி உள்ளோம்

எங்கள் ஊராட்சிகளில் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் நாங்கள் பாலாற்றை நம்பியே இருக்கிறோம். பாலாற்றில் மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு எங்களுக்கு எண்ணற்ற தொல்லைகள் ஏற்படும். ஏற்கனவே பாலாறு தோல் தொழிற்சாலை கழிவு நீரால் மாசுபட்டுள்ளது.

இந்த நிலையில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பேரிடியாக உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகளுக்கு எம்.சாண்ட் பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். இதனை அதிகாரிகள் ஊக்குவிக்கலாம். கூத்தம்பாக்கம், அனங்காநல்லூர் கிராமங்களில் கடந்த மே மாதம் நடந்த கிராமசபை கூட்டங்களில், கிராமங்களில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.


Next Story