கம்பத்தில் ஜீப் மீது கார் மோதி விபத்து: 7 பெண்கள் காயம்...!


கம்பத்தில் ஜீப் மீது கார் மோதி விபத்து: 7 பெண்கள் காயம்...!
x

கம்பம் அருகே ஜீப் மீது கார் மோதிய விபத்தில் 7 பெண் தோட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம் கோம்பை ரோடு தெருவைச் சேர்ந்தவர் ஆசைபிரபு(வயது 28). இவர் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மாலி பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்ட வேலைக்கு பெண் கூலி தொழிலாளர்களை ஜீப் வாகனத்தில் ஏற்றி செல்வது வழக்கம்.

அதன்படி இன்று காலை கம்பம் உலகத்தேவர் தெருவைச்சேர்ந்த மகேஷ்வரி(36),சசிகலா(31),புதுப்பட்டியைச் சேர்ந்த சுகந்தி (31),ராணி(40),கோம்பை ரோடு தெருவைச்சேர்ந்த பேச்சியம்மாள்(57),வனத்தாய்(55),சிங்கரம்மாள்(60) உட்பட 7 பெண் தொழிலாளர்களை கேரளாவிற்கு அழைத்து சென்றுவிட்டு மாலை திரும்பியுள்ளார்.

வாகனத்தை ஆசைபிரபு ஓட்டி வந்துள்ளார். அப்போது கம்பம்-தேனி புறவழிச்சாலை மணிகட்டி ஆலமரம் பிரிவில் வாகனத்தை திருப்பியபோது பின்னால் தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த கோபிரமேஷ்(47) ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் ஜீப் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த ஜீப் டிரைவர் உட்பட 7 பெண் தொழிலாளர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் படுகாயமடைந்த மகேஷ்வரி ,சசிகலாவை மேல்சிகிச்சைக்காக தேனி கா.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதேபோல் பின்னால் காரில் வந்த தேனி கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த பொன்முடி(58),உமாமகேஷ்வரி(52) ஆகியோரும் காயமடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story