2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை
பெண்ணை தாக்கி நகை பறித்த 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் வி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மனைவி அமுதா. இவர் கடந்த 27.12.2011 அன்று பகல் 12 மணிக்கு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த சின்னகண்டியாங்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜதுரை(35), மணலூரை சேர்ந்த ராசு மகன் சந்துரு என்கிற சந்திரசேகர் (33) மற்றும் வீரப்பன், பரமானந்தம் ஆகியோர் அமுதாவிடம் சிலிண்டர் வேண்டுமா? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அமுதா வேண்டாம் என்று கூறியதால், அவர்கள் தண்ணீர் கேட்டுள்ளனர். இதையடுத்து தண்ணீர் எடுக்க அமுதா வீட்டுக்குள் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற ராஜதுரை, சந்துரு ஆகியோர் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு அமுதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர்.
4 பேர் கைது
பின்னர் அவரை தாக்கி கட்டிலின் கீழ் பகுதியில் தள்ளி விட்டுவிட்டு, வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வீரப்பன், பரமானந்தம் ஆகியோருடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜதுரை உள்ளிட்ட 4 பேர் மீதும் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
7 ஆண்டு சிறை
அதன்படி நீதிபதி ஜெகதீஸ்வரி, குற்றம் சாட்டப்பட்ட ராஜதுரை, சந்துரு ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் வீரப்பன், பரமானந்தம் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்கள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.