சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:46 PM GMT)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்


பலாத்காரம் செய்ய முயற்சி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி மகன் சோழராஜன் (வயது 36), தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 14.4.2021 அன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கினார். அப்போது அவர், சிறுமியிடம் வீட்டுக்கு சென்று ஆடைகளை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி பாட்டி வீட்டில் இருந்த சிறுமி தனியாக தனது வீட்டுக்கு சென்றாள். அப்போது அவளை பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற சோழராஜன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் பதறிய சிறுமி, அவரை தள்ளி விட்டுவிட்டு வீட்டில் இருந்து கூச்சலிட்டபடி வெளியே ஓடினாள். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். உடனே சோழராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரூ.2 லட்சம் இழப்பீடு

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோழராஜனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சோழராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் அரசின் ஏதாவது ஒரு நிதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகினார்.


Next Story