70 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்க அனுமதி


70 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்க அனுமதி
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல்கட்டமாக 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல்கட்டமாக 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல் விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல்விவசாயம் பெரும்பாலான பகுதிகளில் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ கருகிவிட்டது. வைகை பாசன கண்மாய் பகுதிகளில் மட்டும் வைகை தண்ணீர் வரவால் பயிர்கள் தப்பி பிழைத்து கைகொடுத்துள்ளன. இவ்வாறு விளைந்த நெல் மணிகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு வசதியாக இந்த ஆண்டு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை தொடங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 100 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்க அனுமதி அளித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்து வறட்சி நிலவுவதால் முதல்கட்டமாக 70 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் தேவைக்கேற்ப நெல்கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விவரம்

இந்த கொள்முதல் நிலையங்களில் ஏ ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 160 என்ற விலையிலும், பொதுரக நெல் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 115 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ராமநாதபுரம் வட்டாரத்தில் புத்தேந்தல், தொருவளுர், எருமைப்பட்டி ஆகிய 3 இடங்களிலும், கடலாடி வட்டாரத்தில் ஆப்பனூர், புனவாசல், மேலச்சிறுபோது, பேய்குளம், கடலாடி உள்ளிட்ட 8 இடங்களிலும், பரமக்குடி வட்டாரத்தில் விளத்தூர், பாம்பூர், களையூர், பரமக்குடி உள்ளிட்ட 7 இடங்களிலும் நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்பட உள்ளது.

70 இடங்களில்...

ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் கூடலூர், கவ்வூர், ஆர்.எஸ்.மங்கலம், சேத்திடல், தும்படைக்காகோட்டை உள்ளிட்ட 12 இடங்களிலும், திருப்புல்லாணி வட்டாரத்தில் மல்லல், களரி, உத்தரகோசமங்கை ஆகிய இடங்களிலும், மண்டபம் வட்டாரத்தில் தேர்போகியிலும், நயினார்கோவில் வட்டாரத்தில் பொட்டகவயல், சிறுவயல், வல்லம் உள்ளிட்ட 9 இடங்களிலும், கமுதி வட்டாரத்தில் கமுதி, கீழராமநதி, டி.புனவாசல் உள்ளிட்ட 5 இடங்களிலும், திருவாடானை வட்டாரத்தில் சிறுமலைக்கோட்டை, கட்டவிளாகம், நெய்வயல், குளத்தூர், திருவாடானை, திருவெற்றியூர், அஞ்சுகோட்டை உள்ளிட்ட 15 இடங்களிலும், போகலூர் வட்டாரத்தில் பாண்டிக்கண்மாய், சேமனூர், அரியகுடி ஆகிய இடங்களிலும், முதுகுளத்தூர் வட்டாரத்தில் கீழமுதுகுளத்தூர், மேலக்கொடுமலூர், உலையூர், புளியங்குடி ஆகிய இடங்களிலும் என மொத்தம் 70 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது.


Related Tags :
Next Story