மோட்டார் சைக்கிளில் கடத்திய 70 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்


மோட்டார் சைக்கிளில் கடத்திய 70 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 70 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 70 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தீவிர கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை தடுக்க மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 2 வாரங்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகளும், குட்கா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

70 கிலோ குட்கா, புகையிலை...

இந்தநிலையில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை மணிக்கட்டிபொட்டல் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த மூடைகளை சோதனை செய்தனர். சோதனையில் 3 சாக்கு மூடை மற்றும் அட்டை பெட்டியில் குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 70 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், விற்பனை செய்த ரூ.42 ஆயிரம், 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

பின்னர் 3 பேரையும் கைது செய்து சுசீந்திரம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குலசேகரம், கல்வெட்டான்குழி, பனிச்சமூட்டை சேர்ந்த அபு முகம்மது (வயது44), என்.ஜி.ஓ.காலனியை அடுத்த மணிக்கட்டிபொட்டலை சேர்ந்த பெரியசாமி (28), என்.ஜி.ஓ.காலனி அடுத்த குஞ்சன்விளை பிள்ளையார் வீதியை சேர்ந்த சுதாகர் (29) என்பது தெரியவந்தது.

பள்ளி மாணவர்களுக்கு...

கேரளாவில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை குமரி மாவட்டத்துக்கு கடத்தி வந்து பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து கைதான 3 பேரையும் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். குட்கா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் என்.ஜி. ஓ. காலனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story