ரூ.70 லட்சம் சிலைகள் திருட்டு


ரூ.70 லட்சம் சிலைகள் திருட்டு
x

திண்டிவனம் அருகே ரூ.70 லட்சம் மதிப்பிலான சிலைகள் திருடு போனது. இது குறித்து 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் 30-ந் தேதி, ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது:-

ஒலக்கூர் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் கி.பி. 9-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் பேரன் 2-ம் ராஜேந்திர தேவனால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள பழமை வாய்ந்த 7 கல் விக்ரகங்கள் 50 ஆண்டுகள் முன்பு வரை பயன்பாட்டில் இருந்தது. மூலவர் அகஸ்தீஸ்வரர், கல் நந்தி ஆகியவைகள் மட்டுமே 960 ஆண்டுகள் தொன்மையான உண்மையான தெய்வ விக்கிரகங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரர் கோவில் அறநிலையத்துறை நிர்வாகிகள் பாதுகாப்புக்காக 5 சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். ஆனால் இன்று வரை அந்த 5 சிலைகள் மீண்டும் கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை. சில சிலைகளை திருடி சென்னை, மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தி ரூ.70 லட்சத்துக்கு விற்பனை செயயப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டுள்ள பழம்பெரும் சிலைகளை மீட்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

8 பிரிவுகளின் கீழ் வழக்கு

இந்த புகாரை ஏற்ற ஒலக்கூர் போலீசார் 2 மாதத்திற்கு பிறகு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, பிரிவு 120-பி (குற்ற சதி), 380 (2) -குடியிருக்கும் வீட்டில் திருட்டு, பிரிவு 201-குற்றவாளியை மறைக்க சாட்சியை மறைத்தல், பிரிவு 202-குற்றம் பற்றிய தகவலை தர கடைமை பட்ட நபர் தராமல் இருத்தல், பிரிவு 204- சாட்சியமாக தாக்கல் செய்யப்படுவதை தடுத்து அழித்தல், பிரிவு 403- சொத்துக்கள் கையாடல், பிரிவு 409-பொது ஊழியர் நம்பிக்கை மோசடி செய்தல், பிரிவு 25 (1), 25 (2)-புராதான கலை நயம் மிக்க பொருட்களை ஏற்றுமதி செய்தல் அல்லது முயற்சித்தல்) ஆகிய 8 பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story