மக்கள் நேர்காணல் முகாமில் 200 பேருக்கு ரூ.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருப்பனந்தாள் அருகே திருலோகி ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 200 பேருக்கு ரூ.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார்.
திருப்பனந்தாள் அருகே திருலோகி ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 200 பேருக்கு ரூ.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார்.
மக்கள் நேர்காணல் முகாம்
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள திருலோகி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.
முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 435 மனுக்கள் பெறப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்
மேலும், வருவாய்த்துறை சார்பில் ரூ.56 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் 31 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், உழவர் நலத்துறை சார்பில் வேளாண் பொருட்கள், முதல்-அமைச்சரின் மருத்துவக்காப்பீடு துறை சார்பில் 10 பேருக்கு புதிய காப்பீடு அட்டை என மொத்தம் 200 பேருக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துசெல்வம், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்டக்குழு உறுப்பினர் இளவரசி சின்னசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், தாசில்தார் சுசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.