கரை ஒதுங்கிய 700 கிலோ பீடி இலைகள்


கரை ஒதுங்கிய 700 கிலோ பீடி இலைகள்
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:45 PM GMT)

வாலிநோக்கம், ஏர்வாடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 700 கிலோ பீடி இலை மூடைகளை கடலோர போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி

வாலிநோக்கம், ஏர்வாடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 700 கிலோ பீடி இலை மூடைகளை கடலோர போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீடி இலைகள்

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக அவ்வப்போது இலங்கைக்கு பீடி இலை, கஞ்சா, கடல்அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் படகு மூலம் கடத்தல்காரர்கள் கடத்தி செல்வது தொடர்கின்றது.

அதேபோல் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளும் அவ்வப்போது ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக கடத்தி வரப்படுகின்றன.

இந்த நிலையில் சாயல்குடி அருகே உள்ள கீழமுந்தல் முதல் வாலிநோக்கம் வரையிலான கடற்கரை பகுதியில் நேற்று பீடி இலை மூடைகள் கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வாலிநோக்கம் கடலோர போலீசார் அப்பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த 26 மூடைகளில் இருந்த சுமார் 500 கிலோ பீடிஇலைகளை கைப்பற்றினார்கள்.

இலங்கைக்கு கடத்தல்

அதேபோல் ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன்வலசை கடற்கரையிலும் கரை ஒதுங்கி கிடந்த 10 மூடையில் இருந்த 200 கிலோ பீடி இலைகளையும் கடலோர போலீசார் கைப்பற்றினர். வாலிநோக்கம், ஏர்வாடி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த இந்த பீடிஇலை மூடைகள் தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தி செல்லும்போது நடுக்கடலில் இந்திய கடற்படை அல்லது கடலோர காவல் படையின் ரோந்து கப்பலை கண்டதும் மூடைகளை கடலில் வீசி சென்றிருக்கலாம் என தெரிகிறது.

மேலும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம், கடல் நீரோட்டத்தால் பீடி இலை மூடைகள் வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், வாலிநோக்கம் என ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் பீடிஇலை மூடைகள் தொடர்ந்து கரை ஒதுங்குவது கடந்த சில மாதங்களாகவே அதிகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story