நகை செய்ய கொடுத்த 72 கிராம் தங்கம் மோசடி
கோவையில் நகை செய்ய கொடுத்த 72 கிராம் தங்கத்தை மோசடி செய்த பட்டறை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவையில் நகை செய்ய கொடுத்த 72 கிராம் தங்கத்தை மோசடி செய்த வடமாநில பட்டறை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
72 கிராம் தங்கம் மோசடி
கோவை பொன்னயராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 43). இவர் அதே பகுதியில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் கே.ஜி.வீதியில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரதீப் போலோ என்பவரிடம் 72 கிராம் தங்கத்தை கொடுத்து நகை செய்துதரக்கோரி கூறியுள்ளார்.
ஆனால், அவர் ஆனந்தகுமாரிடம் வாங்கிய தங்கத்தை நகையாக செய்து கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தகுமார், பிரதீப் போலோவின் பட்டறைக்கு நேரில் சென்றார். அப்போது நகைப்பட்டறை பூட்டி இருந்தது. மேலும் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தங்கத்தை பெற்று மோசடி செய்தது குறித்து, ஆனந்தகுமார் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார்.
பட்டறை உரிமையாளருக்கு வலைவீச்சு
இந்த புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி, மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பிரதீப் போலோ மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே பிரதீப் போலோ ஏற்கனவே திலீப் என்பவரிடம் இருந்து 35 கிராம், சூரிய நாராயணன் என்பவரிடம் இருந்து 65 கிராம் தங்கத்தை பெற்று அவர்களையும் ஏமாற்றிவிட்டு மாயமானதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.