'கடந்த 9 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள், ஹெலிபேட் தளங்கள் கட்டப்பட்டுள்ளன' - மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா


கடந்த 9 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள், ஹெலிபேட் தளங்கள் கட்டப்பட்டுள்ளன - மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா
x

இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரதமர் தனது முடிவுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார் என ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பல்லாவரம் அல்ஸ்டம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மத்திய விமானப் போக்குவரத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து 65 ஆண்டுகள் வரை இந்தியாவில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டும் கட்டப்பட்டிருந்தன. பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் புதிதாக 74 விமான நிலையங்கள், ஹெலிபேட் தளங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு, அந்த எண்ணிக்கை 148 என்று இரட்டிப்பாக்கியிருக்கிறோம்.

இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரதமர் தனது முடிவுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில், 200-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ஹெலிபேட் தளங்களை கட்ட இருக்கிறோம். நாட்டின் விமான போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் 2013-14 காலக்கட்டம் வரை 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. இன்று விமானங்களின் எண்ணிக்கை 75 சதவீதம் அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதிய முனையத்தின் மூலம் ஆண்டுக்கு 2.3 கோடி என்ற அளவில் இருக்கும் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை 3 கோடியாக, அதாவது 30 சதவீதம் அதிகரிக்கும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 3.50 கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைக்கப்படும். இந்த விமான நிலைய முனையம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story