நடப்பாண்டில் 74 லட்சம் பேர் வருமான வரி செலுத்தி உள்ளனர்
நடப்பாண்டில் 74 லட்சம் பேர் வருமான வரி ெசலுத்தி உள்ளனர் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி
நடப்பாண்டில் 74 லட்சம் பேர் வருமான வரி ெசலுத்தி உள்ளனர் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்டிடம் திறப்பு
காரைக்குடியில் உள்ள தொன்மையான வருமான வரித்துறை அலுவலகத்தின் பைந்தமிழ் முற்றம் என்ற பெயரில் புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையர் சந்தனா ராமச்சந்திரன் வரவேற்றார். விழாவிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருமான வரித்துறை சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் காரைக்குடியில் தான் புராதனமான கட்டிடம் உள்ளது. கடந்த 1934-ம் ஆண்டு இந்த கட்டிடத்தை வருமான வரித்துறை வாங்கி உள்ளது. தற்போது இந்த கட்டிடத்தின் பைந்தமிழ் முற்றம் என்ற தொன்மையான கட்டிட வடிவமைப்பு அருமையாக உள்ளது. வருமான வரித்துறையின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் சார்பில் கடந்தாண்டு 67 லட்சம் பேர் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளனர்.
நடப்பாண்டில் வரி செலுத்துவோரில் 7 லட்சம் பேர் கூடுதலாக உயர்ந்து நடப்பாண்டில் 74 லட்சம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர். இதேபோல் ஆண்டுதோறும் 12 சதவீதம் பேர் வரி செலுத்தும் அளவு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கூடுதல் வருமான வரி
மேலும் இந்த மண்டலத்தில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வருமான வரி வசூல் இலக்கு நிர்ணயம் செய்து அதில் ரூ.1 லட்சத்து 8,500 கோடி வரி வசூல் செய்துள்ளதால் கடந்தாண்டை விட கூடுதலாக 23 சதவீதம் கூடுதல் வருமான வரி கிடைத்துள்ளது.
இதுதவிர வருமான வரி படிவம் எளிதாக்கப்பட்டு அதை வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வருமான வரி அலுவலகத்திற்கு வராமலேயே வரி செலுத்துவது குறித்த படிவங்களை சமர்ப்பிக்கவும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது இங்கு அமைக்கப்பட்ட இந்த புராதனமான கட்டிடத்தில் வருமான வரி செலுத்தும் வரலாறு தொடர வேண்டும் என்பதற்காக முதன்முதலாக இங்கு அருங்காட்சியகம் அமைத்து அதில் வருமான வரி குறித்தும், இதற்கு முன்பு வருமான வரி செலுத்தியவர்களின் ஆவணங்கள் குறித்தும் சேகரித்து இங்கு காட்சிப்படுத்தப்படும்.
இந்த பகுதியில் கடந்த 1930-ம் ஆண்டு கிடைத்த ஓலைச்சுவடியில் உள்ள வருமான வரி குறித்த தகவல்கள் சேகரித்து இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையர் சீமாராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் காரைக்குடி வருமான வரித்துறை அதிகாரிகள், பட்டய கணக்காளர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை ஆணையர் ரேணுராஜ் நன்றி கூறினார்.