மாவட்டம் முழுவதும் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் - 10 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு


மாவட்டம் முழுவதும் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் - 10 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு
x

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சி ஜே.என்.சாலை உழவர் சந்தை பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,049 ஆகும். நேற்று முன்தினம் மட்டும் 175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. அந்த வகையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுளோர் எண்ணிக்கை 36 ஆகும். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி முகாம்களின் வெற்றியே ஆகும். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை 95 சதவீதம் மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசியை 81 சதவீதம் மக்கள் செலுத்தி கொண்டுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இலவசமாக அரசு அறிவிப்பின்படி இன்றிலிருந்து 75 நாட்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி அரசு தடுப்பூசி முகாம்களில் 18 வயது முதல் 60 வயது வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சம் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், மீதமுள்ள 8 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும். குறுஞ்செய்தி பெறப்படாதவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடையவரா என்பதை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களுடன் முகாம்களில் உள்ள டாக்டர்கள் மற்றும் நர்ஸ்சுகளிடம் காண்பித்து தெரிந்து கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தகுதியான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, மாவட்ட கொல்லைநோய் தடுப்பு அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட பயிற்சி குழு மருத்துவர் தீபலட்சுமி, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவிஸ்ரீ, திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், வட்டார மருத்துவ அலுவலர் சரவணகுமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story