75 கால்நடை மீட்பு குழுக்கள் அமைப்பு


75 கால்நடை மீட்பு குழுக்கள் அமைப்பு
x

வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்டத்தில் 75 கால்நடை மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

மருத்துவர் செயலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை நேரங்களில் மரத்தின் அடியிலோ, மின்கம்பங்களின் அடியிலோ, வெட்ட வெளியிலோ கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். மேலும், கால்நடை மருத்துவர் செயலியை தங்களுடைய தொடுதிரை செல்போனில் ஆன்டிராய்டு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவர் குறித்த விபரங்களை அறிந்து தங்கள் தேவைக்கேற்ப தொடர்பு கொள்ளலாம். கால்நடைகள் இறந்தவுடன் அதன் விபரத்தை கிராம நிர்வாக அலுவலர் மூலம் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் தகவல் தெரிவித்து பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை வட்டாட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கால்நடை மீட்பு குழுக்கள்

மாவட்டத்தில் உள்ள இலவச கால்நடை அவசர ஊர்தியின் எண் 1962-ஐ தொடர்பு கொண்டு அவசர இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளவும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் விரைவு மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விரைவு மீட்பு குழுக்களில் உதவி இயக்குனர், கால்நடை மருத்துவர் தலைமையில் ஒரு குழுவிற்கு ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் வீதம் 13 ஒன்றியத்திற்கும் 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 3 ஒன்றியத்திலுள்ள கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் 130 முதல் பொறுப்பாளர்கள் ஒன்றியம் வாரியாக நியமனம் செய்யப்பட்டு, பொதுமக்கள் அறியும் வண்ணம் கால்நடை மருந்தகங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி

இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகளில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ள ஏதுவாக உரிய தடுப்பூசி மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளது.

மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனங்கள் உள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை அவசர காலத்தில் தேவைப்படும் இடங்களுக்கு உடனுக்குடன் கொண்டு செல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 கால்நடை தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செல்போன் எண்கள்

கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏதும் ஏற்படாத வண்ணம் தேவையான உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் மாவட்ட கால்நடை பண்ணையில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் விபரம், மண்டல இணை இயக்குனர் 9445001218, உதவி இயக்குநர் கால்நடைநோய்புலனாய்வு பிரிவு புதுக்கோட்டை 9842475386, உதவி இயக்குனர் புதுக்கோட்டை 9842475386, உதவி இயக்குனர் அறந்தாங்கி9443391025, உதவி இயக்குனர் இலுப்பூர் 9443391025 ஆகும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சிரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story