பயிர் காப்பீட்டு திட்டத்தில் 75 ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர 75 ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.
பயிர் காப்பீடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பருவ மழையை நம்பி விவசாயிகள் நாற்று நட்டுள்ளனர். இந்த நிலையில் இயற்கையின் சீற்றம், மழையின் காரணமாக நெல் சேதமடைந்தால் நிவாரணம் பெறுவதற்காக பயிர் காப்பீட்டு திட்டத்தில் தங்களது சாகுபடியை பதிவு செய்ய வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்காக மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல்லுக்கு பிரிமீயம் தொகையாக ஏக்கருக்கு ரூ.488.05- செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி தேதி கடந்த 15-ந் தேதியாக இருந்தது. இதனை 21-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பலர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் தொகை செலுத்தி தங்களை இணைத்துக்கொண்டனர்.
75 ஆயிரம் விவசாயிகள்
இந்த நிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை கணக்கெடுத்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தில் தற்போது வரை எடுத்துள்ள கணக்கெடுப்பில் 75 ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடியில் 95 சதவீதம் வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.