7,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன- : மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு -கலெக்டர் அனிஷ்சேகர் அறிவிப்பு


7,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன- : மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு -கலெக்டர் அனிஷ்சேகர் அறிவிப்பு
x

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த போட்டி தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்று கலெக்டர் அனிஷ்சேகர் கூறியுள்ளார்.

மதுரை


மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த போட்டி தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்று கலெக்டர் அனிஷ்சேகர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பிக்கும் முறை

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-ந் தேதி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம். தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஆள்சேர்ப்பு விவரங்கள் போன்றவை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரியில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான இந்த தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 3-ந் தேதியும், பணம் செலுத்துவதற்கு 4-ந் தேதியும் கடைசி நாளாகும்.

இணையதளம்

தென் மண்டலத்தில் கம்ப்யூட்டர் அடிப்படையிலான இந்த தேர்வு, வருகிற ஜூலை மாதம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையத்திலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் என மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இந்த தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையதளத்தில் " TN Career Services Employment" மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் "AIM TN" என்ற யூ டியூப் சேனல்களில் உள்ள வீடியோக்களை கண்டு பயன்பெறலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story