75-வது பிறந்தநாள்: ஜெயலலிதா உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை


75-வது பிறந்தநாள்: ஜெயலலிதா உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
x

ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். 75 கிலோ ‘கேக்’ வெட்டி அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு நேற்று 75-வது பிறந்தநாள் ஆகும். அவருடைய பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர், எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க. நடத்தும் நாளிதழ் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலர் தயார் செய்யப்பட்டிருந்தது. இதனை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்பெற்றுக் கொண்டார். அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் கலைப்புனிதன் எழுதிய 'ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி ஒரு பார்வை' என்ற புத்தகத்தையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்பின்னர் அ.தி.மு.க. கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

'கேக்' வெட்டி கொண்டாட்டம்

ஜெயலலிதாவின் 75-வது வயதை குறிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டில் 75 கிலோ எடையில் 'கேக்' வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த 'கேக்'கை எடப்பாடி பழனிசாமி வெட்டினார். மகளிரணி நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோருக்கு வழங்கினார். பதிலுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு பா.வளர்மதி 'கேக்' ஊட்டி விட்டார். அப்போது நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கலை இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன், துணை செயலாளர் இ.சி.சேகர் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கட்சி அலுவலக வளாகத்துக்கு உள்ளே முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சார்பிலும், கட்சி அலுவலகம் வெளியே மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் சார்பிலும் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தனது கையால் உணவு பரிமாறி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

உற்சாக வரவேற்பு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்க கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு செண்டை மேளம் முழங்க, பூக்களை தூவி அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story