மோசடி புகார் கூறப்பட்ட நிதிநிறுவனத்தில் 76 ஆயிரம் பேர் முதலீடு
மோசடி புகார் கூறப்பட்ட நிதிநிறுவனத்தில் 76 ஆயிரம் பேர் முதலீடு
கோவை
கோவையில் மோசடி புகார் கூறப்பட்ட நிதி நிறுவனத்தில் 76 ஆயிரம் பேர் தங்களது பணத்தை முதலீடு செய்தது தெரியவந்தது. அவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்கும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிதி நிறுவனம்
கோவை பீளமேட்டில் ஒரு தனியார் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு இரட்டிப்பு முதலீட்டு தொகை என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆரம்பத்தில் கோவையில் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் சென்னை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பிற நகரங்கள் மற்றும் கேரளாவிலும் தொடங்கப்பட்டன.
இதையடுத்து இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தப்படி இந்த நிதி நிறுவனம் பொதுமக்களுக்கு லாபத் தொகையை வழங்கவில்லை. மேலும் அவர்களின் முதலீட்டு பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள், இது குறித்து கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தனிப்படை அமைப்பு
இதனிடையே தனியார் நிதி நிறுவனத்தின் மோசடி குறித்து விசாரணை நடத்த போலீஸ் துணை சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், லட்சுமி, மகேஸ்வரி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் இந்த நிதி நிறுவனத்தின் மோசடி குறித்து மட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-
கோவை பீளமேட்டில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சூலூரை சேர்ந்த ரமேஷ் (வயது 30) உள்ளார். இந்த நிறுவனம் சார்பில் 4 கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முதல் திட்டத்தின் படி ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும். 20 மாதங்களுக்கு பின் முதலீட்டு தொகை திரும்ப அளிக்கப்படும்.
கவர்ச்சிகர அறிவிப்பு
2-வது திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் வட்டியாக வழங்கப்படும். 10 மாத முடிவில் 10 சதவீத மூலதன வட்டியுடன் சேர்த்து முதலீட்டு தொகை திரும்ப கிடைக்கும். 3-வது திட்டத்தில் ரூ.1 லட்சத்திற்கு ஆண்டிற்கு 12 சதவீத வட்டியுடன் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும். 4-வது திட்டமாக ரூ.1 லட்சத்தை வைப்பு நிதியாக செலுத்தினால் 1 ஆண்டு முடிவில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதனை நம்பி அந்த நிறுவனத்தில் 76 ஆயிரம் பேர் முதலீடு செய்து உள்ளனர். இவர்களின் முதலீட்டு தொகை ரூ.1,300 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது வரை 31 பேர் மட்டுமே இந்த நிறுவனம் குறித்து புகார் அளித்து உள்ளனர். எனவே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 76 ஆயிரம் பேரின் விபரங்களை சேகரித்து வருகிறோம்.
அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை சேகரித்து, அவர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு, ஏதாவது பணம் திரும்ப கிடைத்ததா? ஏமாந்த தொகை எவ்வளவு? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுகுறித்து எங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் நாளை (இன்று) கோவை வர உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.