பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,655 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,655 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
13-ந்தேதி தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 எனப்படும் 12-ம் வகுப்புக்கு வருகிற 13-ந்தேதியும், பிளஸ்-1 எனப்படும் 11-ம் வகுப்புக்கு 14-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த பொதுத்தேர்வுகளில் 12-ம் வகுப்பில் 79 பள்ளிகளை சேர்ந்த 3,906 மாணவர்களும், 3,749 மாணவிகளும் என மொத்தம் 7,655 பேரும், 11-ம் வகுப்பில் 80 பள்ளிகளை சேர்ந்த 3,692 மாணவர்களும், 3,605 மாணவிகளும் என மொத்தம் 7,297 பேரும் தலா 33 தேர்வு மையங்களில் அரசு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர்.
10-ம் வகுப்பிற்கு 143 பள்ளிகளை சேர்ந்த 4,288 மாணவர்களும், 3,905 மாணவிகளும் என மொத்தம் 8,193 பேர் மொத்தம் 41 மையங்களில் அரசு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர்.
1,000 ஆசிரியர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்து ஆசிரியர்களிடையே பேசினார். அவர் பேசுகையில், தேர்வு பணிகளில் தேர்வறை கண்காணிப்பாளர்கள், நிலையான பறக்கும் படையினர், பறக்கும் படை உறுப்பினர்கள் என சுமார் 1,000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளார்கள். அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய போலீஸ் பாதுகாப்பு என அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை மேற்கொள்ளப்படும்
கடந்த காலங்களில் நமது மாவட்டம் அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்ததற்கு பின்னால் ஆசிரியர்களுடைய அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த தேர்ச்சியை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். அவர்களை கண்டறிவது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பின் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் உங்களைவிட அக்கறை கொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது, என்றார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், தேர்வுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகசுந்தரம், குழந்தைராஜன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.