77 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


77 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x

நெல்லை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் 77 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி நெல்லை மாநகரப்பகுதி முழுவதும் சுகாதார அதிகாரிகள், ஆய்வாளர்கள் தலைமையில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதியில் சுகாதார அலுவலர் சாகுல்அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் 25 கடைகளில் ஆய்வு செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை டவுன் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பிளாஸ்டிக் மொத்த வியாபாரக்கடைகளில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் திடீரென ஆய்வு நடத்தி அங்கு பதுக்கி வைத்திருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதேபோல் மேலப்பாளையம் நேருஜி ரோடு, நேதாஜி சாலை பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேற்பார்வையாளர்கள் பரமன், சண்முகம், சப்பானி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சங்கர், பரப்புரையாளர்கள் கலைசெல்வி, மாயாண்டி, வேலு பிரபாகரன், மரிய பாக்கியம், ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story