சாலை விதிகளை மீறிய 77 வாகனங்கள் பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் சாலை விதிகளை மீறிய 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் சாலை விதிகளை மீறிய 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
77 வாகனங்கள் பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் (ஜூலை) வாகன தணிக்கை மேற்கொண்டனர். அந்த தணிக்கையின் போது ஆயிரத்து 254 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 349 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
இதில் தகுதிச் சான்று புதுப்பிக்காமல், அனுமதி சீட்டு புதுப்பிக்காமல், சாலை வரி செலுத்தாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல், அதிக பாரம் ஏற்றி செல்லுதல், இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்குதல் உள்ளிட்ட சாலை போக்குவரத்து விதிகளை மீறிய 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.10½ லட்சம் அபராதம்
மேலும் சாலை வரி மற்றும் அபராததொகையாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் ரூ.7 லட்சத்து 66 ஆயிரம் அபராத தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.