சாலைகளை பராமரிக்க 78 மெக்கானிக்கல் 'ஸ்வீப்பர்' வாகனங்கள்


சாலைகளை பராமரிக்க 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள்
x

சென்னையில் உள்ள சாலைகளை பராமரிக்க 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பஸ்கள் செல்லும் சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன. இதை சரிசெய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது.

78 வாகனங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (பகுதி அளவு) ஆகிய 4 மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய 15 மெக்கானிக்கல் 'ஸ்வீப்பர்' வாகனங்களும், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் (பகுதி அளவு) மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய 16 மெக்கானிக்கல் 'ஸ்வீப்பர்' வாகனங்களும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய 47 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் என மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் சாலைகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தூய்மை பணிகள்

குறிப்பாக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 கி.மீ அளவுக்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பஸ்கள் செல்லும் சாலைகளுடன் சேர்த்து மாநகரின் முக்கியமான உட்புறச் சாலைகளையும் இந்த வாகனங்களை கொண்டு சுத்தம் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story