காய்ச்சலால் 78 மாணவர்கள், ஆசிரியர்கள் விடுப்பு


காய்ச்சலால் 78 மாணவர்கள், ஆசிரியர்கள் விடுப்பு
x

திருப்பத்தூர் அருகே காய்ச்சல் காரணமாக 78 மாணவர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்ததால், அங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

78 மாணவர்கள் விடுப்பு

திருப்பத்தூர் அருகே உள்ள அங்கநாதவலசை உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று காய்ச்சல் எனக்கூறி 78 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தனர். இந்த தகவல் பரவியதையடுத்து மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

ஆய்வில் மாணவர்கள் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்து இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவ முகாம்

இந்த பள்ளியில் இன்றைய தினம் (நேற்று) 78 மாணவர்கள் காய்ச்சல் காரணமாக விடுமுறை எடுத்துள்ளனர் என்ற தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பல்வேறு நபர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி இருந்து வந்ததாக கூறப்பட்டதால் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. முகாமில் பள்ளிக்கு வராமல் இருந்த 78 மாணவர்களில் 5 பேருக்கு சளியுடன் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளியின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி லார்வா கொசு புழுக்கள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மரக்கிளைகளின் இடைப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்குமே காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கை

ஒரே நேரத்தில் அதிகமான மாணவர்கள் விடுப்பு எடுப்பதற்கான காரணம் காய்ச்சல் என்பதால், வேறு ஏதேனும் டெங்கு போன்ற பிரச்சினைகள் இருக்குமா என்பதற்கான காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தமாக உள்ளது. சுற்றியுள்ள இடத்திலும் தண்ணீர் தேங்க வாய்ப்புகள் இல்லை. மருத்துவர்கள் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய காய்ச்சலாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். எனினும் மாணவர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வந்தவுடன், வேறு ஏதேனும் காரணங்களால் காய்ச்சல் வந்தது அறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து இடங்களிலும் மாதத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்யவும், அதை காணொலியாக பதிவு செய்து அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் குளோரினை அதிகமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், தாசில்தார் சிவப்பிரகாசம், அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story