ஜல்லிக்கட்டில் 787 காளைகள் சீறிப்பாய்ந்தன
ஜல்லிக்கட்டில் 787 காளைகள் சீறிப்பாய்ந்தன,
மணிகண்டம்:
ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூரில் உள்ள தானாய் முளைத்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மணப்பாறை, குளித்தலை, கரூர், விராலிமலை, ஆவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளுக்கு ஸ்ரீரங்கம் மண்டல கால்நடைத்துறை உதவி இயக்குனர் கணபதி பிரசாத் தலைமையிலான கால்நடை மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, 787 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு 166 வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை பழனியாண்டி எம்.எல்.ஏ., அளுந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எமல்டா லில்லிகிரேஸி ஆரோக்கியசாமி, முக்கியஸ்தர் முத்துக்கருப்பன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
33 பேர் காயம்
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றன. சில காளைகள் களத்தில் நின்று சுழன்று சுழன்று முடிந்தால் பிடித்துப்பார் என்று மிரட்டின. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. அப்போது பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். காலை 8.15 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர் உள்பட 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே தயாராக இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர் மணிகண்டம் ராமச்சந்திரனின் மகன் குணசேகரன்(வயது 28), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த காளையின் உரிமையாளர் அழகர்சாமி மகன் ரமேஷ்(35) ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசுகள்
மேலும் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குக்கர், மிக்சி, மின்விசிறி, நாற்காலி, தங்கக்காசு, வெள்ளிக்காசு, ரொக்கப்பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்சி மாவட்ட கூடுதல் ேபாலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி மேற்பார்வையில் திருவெறும்பூர் துணை சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.