788 மையங்களில் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது


788 மையங்களில் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 788 மையங்களில் விண்ணப்பப்பதிவு முகாம் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

விண்ணப்ப பதிவு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பப்பதிவு முகாம் நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக திருப்பூர் மாநகராட்சியில் 1-வது, 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 30 வார்டுகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 265 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது. திருப்பூர் மாநகராட்சி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், பொங்கலூர், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்கட்டமாக நேற்று முதல் வருகிற 4-ந் தேதி வரை 827 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 788 மையங்களில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 460 கார்டுதாரர்களுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய மொத்தம் 1,429 தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். தினமும் காலை 30, மாலை 30 என 60 விண்ணப்பங்கள் ஒவ்வொரு மையத்திலும் பதிவு செய்யப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

விண்ணப்பப்பதிவு பணியில் இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், 5 மையங்களுக்கு 1 மண்டல அலுவலர்கள், 15 மையங்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். டோக்கன், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின்கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை பெண்கள் எடுத்து வந்து விண்ணப்பத்தை கொடுத்து பதிவு செய்தனர்.

நேற்று திருப்பூர் மாநகரில் ஏ.பி.எஸ்.அகாடமி மெட்ரிக் பள்ளி, நெருப்பெரிச்சல் வரி வசூல் மையம், வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நாச்சிப்பாளையம் நூலகம், கேத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, படியூர் நூலகம், சிவன்மலை ஊராட்சி அலுவலகம், ஊதியூர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம், நஞ்சியம்பாளையம் ஊராட்சி அலுவலகம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, துங்காவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சின்னவீரம்பட்டி ஊராட்சி அலுவலகம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பார்க் கல்லூரி உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பப்பதிவை கலெக்டர் ஆய்வு செய்தார்.

முன்னதாக காங்கயம் போலீஸ் நிலையத்தில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன், உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story