7-வது ஊதியக்குழு உத்தரவை தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அமல்படுத்த வேண்டும்
மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு உத்தரவை தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில தலைவர் கூறினார்.
பொள்ளாச்சி
மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு உத்தரவை தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில தலைவர் கூறினார்.
பொதுக்குழு கூட்டம்
பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொள்ளாச்சி கிளை தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். முன்னதாக துணை தலைவர் சாமிதாஸ் வரவேற்று பேசினார். மாநில தலைவர் ரங்கராஜ் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் தண்டபாணி, துணை தலைவர் ஜெயபிரகாஷ், பொருளாளர் மணி, கிளை பொருளாளர் நஞ்சுராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து மாநில தலைவர் ரங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கு முதல்-அமைச்சர், நிதி அமைச்சரை அழைக்க முடிவு செய்து முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கான ஆயத்த பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
10 சதவீதம் கூடுதல்
ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவில் திருந்திய நிர்ணயத்தை உத்தரவாக அளித்தது. அந்த உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை. எனவே அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். தி.மு.க. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 70 வயது முடிந்தவர்களுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவித்தனர். இதுவரைக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த திட்டம் இன்னும் அறிவிக்கவில்லை.
ஓய்வுபெறும் போது ஒரு தொகையை கொடுத்து மாதந்தோறும் வீதம் 15 ஆண்டுகள் பிடிக்கின்றனர். அதனை மற்ற மாநிலங்களை போன்று 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வெள்ளி விழா மாநாட்டில் வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.