8 வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு
சாணார்பட்டி அருகே 2 கிராமங்களில் அடுத்தடுத்து 8 வீடுகளில் புகுந்து பணம், நகை, செல்போன் திருடப்பட்டது. புத்தகப்பைகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
செல்போன், பணம்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வி.குரும்பபட்டியில் வசித்து வருபவர் இளஞ்சியம் (வயது 43). நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது வீடு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.45 ஆயிரத்தை திருடினர். மேலும் இளஞ்சியத்தின் செல்போனையும் எடுத்து சென்று விட்டனர்.
கொலுசு, தங்கத்தோடு
இதேபோல் இளஞ்சியத்தின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கிற சசி (40) என்பவரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 2 ஜோடி கொலுசு, அரை பவுன் தங்கத்தோடு, ரூ.2,500 ஆகியவற்றை திருடினர்.
மேலும் அருகே வசிக்கிற ஆட்டோ டிரைவர் ரமேஷ் (40) வீட்டுக்குள் புகுந்து சட்டைப்பையில் இருந்த ரூ.1,000 மற்றும் செல்போனை திருடி சென்று விட்டனர். சதீஷ், வெள்ளத்தாய் ஆகியோர் வீடுகளில் புகுந்து செல்போன்களை எடுத்து சென்றனர்.
புத்தகப்பைகள் திருட்டு
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள காளீஸ்வரி என்பவரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அங்கு பணம், செல்போன் எதுவும் இருக்கிறதா? என்று மர்ம நபர்கள் தேடி பார்த்தனர். அப்போது அங்கு எதுவும் இல்லை.
காளீஸ்வரியின் மகள்கள் முறையே 10, 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களது புத்தகப்பைகள் வீட்டில் இருந்தன. கையில் கிடைத்தது லாபம் என்று கருதிய திருடர்கள் 2 புத்தகப்பைகளையும் தூக்கி சென்றனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது செல்போன், பணம், புத்தகப்பைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு 6 குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆதார் அட்டை, ஏ.டி.எம்.கார்டு
இதேபோல் கோபால்பட்டியை அடுத்த க.பங்களா என்ற கிராமத்தில் சாலையோரம் டீக்கடை நடத்தி வருபவர் ரம்யா (29). இவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த ரூ.4 ஆயிரம், 2 செல்போன்களை திருடினர். மேலும் அப்பகுதியில் வசிக்கிற அழகர்சாமி என்பவரின் வீட்டில் செல்போன் மற்றும் மணிபர்சை மர்ம நபர்கள் எடுத்து சென்றனர்.
இதற்கிடையே அழகர்சாமியிடம் திருடப்பட்ட மணிபர்சில் இருந்த அவரது ஆதார் ்கார்டு, ஏ.டி.எம் கார்டு ஆகியவை க.பங்களாவை அடுத்த கொரசினம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் கிடந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த கார்டுகளை எடுத்தனர். அதில் உள்ள முகவரியை பார்த்து நேற்று காலை அழகர்சாமியிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் பீதி
சாணார்பட்டி பகுதியில் அடுத்தடுத்து நேற்று முன்தினம் இரவில் 8 வீடுகளில் திருட்டு போன துணிகர சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீடுகளில் பதிவாகி இருந்த ரேகைகளை தடய அறிவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும் விளக்குரோடு முதல் நத்தம் வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசாா் ஆய்வு செய்தனர்.
இதுமட்டுமின்றி திருட்டு போன செல்போன்களின் செயல்பாடுகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபா்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடப்பட்ட நகை, பணம், செல்போன் ஆகியவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று போலீசாா் கூறினர்.